Wednesday, September 24, 2008

சுஜாதாவின் சாவு ...

(சுஜாதாவின் சாவு குறித்து கவிதாசரண் (ஆகஸ்டு - செப்டம்பர் 2008) இதழில் கவிதாசரண் எழுதியது)

எழுத்தாளர் சுஜாதா மறைவைக் கேட்டு எனக்கேற்பட்ட உணர்வை - நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட - நீங்கள் எதை விரும்ப வேண்டும், எதை விரும்பக் கூடாது என்று அறிவுபூர்வமாக எப்போதாவது தேர்ந்ததுண்டா என்ன?- சொல்லத் தோன்றுகிறது. வெகுநேரம் குடலுக்குள் சடுகுடு நடத்திக்கொண்டிருந்த காற்று பிரிந்து ஒரு நீண்ட ஆசுவாசம் ஏற்படுமே, அப்படி இருந்தது. செத்தவர்களைப் பற்றி நல்லவிதமாகத்தான் பேச வேண்டும் என ஒரு மரபை வைத்திருக்கிறார்கள்- ஏதோ யாருக்கும் வராத சாவு செத்தவருக்கு வந்துவிட்டாற்போல, கோட்சே செத்ததும் காந்தியின் ரட்சகனாகிவிட்டாற்போல. எனக்கான உண்மை எனக்கு நல்லவிதமானதுதான். ஒவ்வொருவருக்கும் பரந்த பரிமாணங்கள் உண்டெனினும் ஓர் உயிர்நிலை இருக்கும். சுஜாதாவின் உயிர்நிலை பார்ப்பன வக்கிரம். சினிமாத்தனமான விரிந்த வக்கிரம். அதிலும் கடைசியாக “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…….” தம் பிறவித் துயரங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப்போன பெண்பிள்ளைகளாம் அங்கவை சங்கவையை அவமதித்தது, அதற்கொரு கோமாளிப் பேராசிரியனைப் பயன்படுத்தியது- நான் ஒன்றும் செருப்பால் அடிக்கத் தோன்றியது என்று சொல்லவில்லை-வாயு பிரிந்து ஆசுவாசம் தந்தது என்றுதான் சொல்கிறேன்.அந்த எழுத்தாளன் பிரமிக்க வைத்ததாகப் பிதற்றும் மனிதர்களைப் பார்க்க அருவருப்பும் வருத்தமும்தான் தோன்றுகிறது. உலக மயம், சாதி மேன்மை, மனித இழிவு என்று நீங்கள் எதையெல்லாம் வெறுக்க வேண்டுமோ, அவை அனைத்தின் துர்நாற்றம் மிக்க எழுத்தூற்றம்தான் அவர். அவரை விட வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் (நான் ஆரணி குப்புசாமி முதலியாரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. சூத்திர ஒப்புமை வேண்டாம் பாருங்கள்.) சமூக வக்கிரமற்ற சந்தோஷமான திகில்கதைகளை இவரை விடப் படு சுவாரஸ்யமாக எழுதியவர்கள்தாம்.கடைக்குப் போய் ஆணுறை கேட்கிறீர்கள்.”பெரிசு வேணுமா? சின்னதா?” என்று கடைக்காரன் கேட்டால் என்ன சொல்வீர்கள்? உங்ளுடையது சிறிதென்று கடைக்காரன் கருதிவிடக் கூடாதே என்று அவசர அவசரமாகப் பெரிதைக் கேட்பீர்கள். ஆணுறையில் பெரிது சிறிதெல்லாம் கிடையாது தெரியுமா? ஆனால் அப்படிப் பெரிதாக விற்றுத் திரிந்தவர்தான் சுஜாதா.